ஆதரவற்ற குழந்தைகள் ஐஏஎஸ் ஆக கேரள அரசு புதிய முயற்சி
பெற்றோர்களால் கைவிடப்பட்டு, பாதுகாப்பு மையங்களில் வளரும் குழந்தைகளுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் புதிய முயற்சியை கேரள அரசு கையிலெடுத்துள்ளது.
கேரளாவில் புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட, தெருவில் தூக்கி எறியப்பட்ட இளம் குழந்தைகள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களில் வளர்ந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் குழந்தைகள் நல்ல வாழ்க்கை வேண்டும் என்றும் தங்களுக்கு மரியாதையான வேலை கிடைக்க வேண்டும் என்றும் ஏங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், ஆதரவற்றோர் இல்லங்களில் வளருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கேரளா சமூகநீதி துறை புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. ஆதரவற்ற குழந்தைகளில் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஐஏஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ் தேர்வுகளை எழுதுவதற்காக பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கொச்சியில் ‘தெஜோமயா இல்லங்களை’ தொடங்க திட்டமிட்டுள்ளது.
தொடக்கத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் ஒரு தன்னார்வ அமைப்புடன் இணைந்து, ஒரு இல்லத்தில் 45 குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். 10 ஆம் வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். இதில் முதல் பயிற்சி இல்லம் பிரத்யேகமாக பெண்களுக்காக தொடங்கப்படவுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள எடக்கட்டுவயல் பகுதியில் உள்ள மாவட்ட பஞ்சாயத்தில் உருவாக்கப்பட உள்ளது.
இதுகுறித்து சமூகநீதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சிறப்பு பொறுப்பு செயலாளர் பிரபாகர் ஐஏஎஸ் கூறுகையில், “மாநிலம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் சுமார் 1,200 குழந்தைகள் உள்ளனர். ஆனால், துரதிருஷ்டவசமாக, திறமைகளின் அடிப்படையில் அவர்கள் கவனிக்கப்படுவதில்லை. சிலர் படிப்பில், கூடுதல் திறமையில் சுட்டியாக இருப்பார்கள். மற்ற குழந்தைகளுடன் அவர்கள் தொடர்ந்து இருக்க வைப்பது மட்டுப்படுத்துவதாக ஆகிவிடும். அதனால், திறமையான குழந்தைகளுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு திறன் பயிற்சி மேம்பாடு அளிப்பதோடு, விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிற்சியை உள்ளூர் குழந்தைகளோடு இணைந்து அளிக்கப்படும்” என்றார்.