உருவக்கேலியை தண்டிக்கும் புதிய சட்டம்.. கேரள அரசு அதிரடி!
கேரள அரசு அறிமுகப்படுத்தவுள்ள புதிய ராகிங் (Ragging) தடைச் சட்டத்தில் உருவக் கேலியும் தண்டனைக்குரிய குற்றமாக சேர்க்கப்படவுள்ளது.
உருவக்கேலியும் குற்றமே..
கேரள கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் ஜே.எஸ்.சித்தார்த்தன் ராகிங் துன்புறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அடுத்து கேரள ராகிங் தடை சட்டம் வலுவற்றதாக இருப்பதாக பரவலான விமர்சனங்கள் இருந்தன. எனவே ராகிங்கை தடுப்பதற்கான புதிய சட்டத்தை கேரள அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
புதிய சட்டத்துக்கான மசோதாவில், உருவக் கேலி, உளவியல்ரீதியான துன்புறுத்தல், மற்றும் டிஜிட்டல் துன்புறுத்தல் ஆகியவை முதன்முறையாகத் தண்டனைக்குரிய குற்றங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இணையம் அல்லது பிற மின்னணு சாதனங்கள் மூலம் செய்யப்படும் எந்தவொரு துன்புறுத்தலும் இனி காவல்துறையினர் பிடி ஆணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றமாகக் கருதப்படும்.
ராகிங்கின் வரையறை, குற்றச் செயல்களைத் தூண்டுதல், குற்றச் சதி, சட்டவிரோதமாகக் கூட்டம்கூடுதல், கலவரம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் மாணவர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.