கேரளாவுக்கு முதலில் உதவி ! அப்புறம் "பில்" அனுப்பிய மத்திய அரசு
கேரள வெள்ளத்தில் உதவி செய்ததற்காக ரூ.34 கோடி தாருங்கள் என கேரள அரசுக்கு விமானப்படை கடிதம் எழுதி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
கேரளாவில் ஏற்பட்ட கனமழையை யாராலும் மறந்துவிட முடியாது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்தனர். வெள்ளப் பாதிப்பின் போது 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாமில் தங்கியிருந்தனர். வரலாறு காணாத இயற்கை பேரிடரால் 483 பேர் உயிரிழந்ததாகவும் 140 பேரைக் காணவில்லை என்றும் 14 லட்சத்து 50 ஆயிரத்து 707 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து இருந்ததாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சட்டப்பேரவையில் தெரிவித்தார்
துயரில் தவித்த கேரளாவுக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் உதவிகளை கொடுத்தனர். இந்தியாவின் ஒவ்வொரு மூலைமுடுக்கில் இருந்தும் நிவாரணத்தொகையை மக்கள் அனுப்பி வைத்தனர். மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர், விமானப்படையினர், துணை ராணுவம், போலீஸார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டனர்.
கேரளா வெள்ளத்தால் தங்கள் மாநிலத்திற்கு ரூ.31 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் இதுவரை பேரிடர் நிவாரண நிதியாக ரூ.2,683 கோடி மட்டுமே வந்துள்ளதாகவும், மாநிலத்தைக் கட்டமைக்க இந்த நிதி போதாது என்றும் முதல்வர் பினராயி விஜயன் வேதனைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கேரள வெள்ளத்தில் உதவி செய்ததற்காக ரூ.34 கோடி தாருங்கள் என கேரள அரசுக்கு விமானப்படை கடிதம் எழுதி இருப்பதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளத்தின் போது கேரள அரசுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி நிதி வழங்கியது. ஆனால், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய விலையில் அரிசி, மண்எண்ணெய் போன்ற பொருட்களை வழங்கியதற்காகவும், மீட்புப்பணிக்கு உதவி செய்ததற்காகவும் ரூ.290 கோடி கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளது. அப்படி பார்த்தால் ரூ.600 கோடியில் ரூ.290 கோடி மத்திய அரசுக்கு மீண்டும் சென்றுவிடும். இதில் விமானப்படையினர் அவர்களின் மீட்புப்பணிக்காக மட்டும் ரூ.33.79 கோடி பில்தொகை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்