வெளிநாட்டு நிதியை ஏற்க வேண்டும்: மத்திய அரசுக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்
கேரள வெள்ள நிவாரணப்பணிகளுக்காக உதவி அளிக்க முன்வந்திருக்கும் வெளிநாட்டு அரசுகளின் உதவியை மத்திய அரசு ஏற்க முன்வர வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 700 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க ஐக்கிய அரபு அமீரகமும், கத்தார் மற்றும் மாலத்தீவுகள் தலா 35 கோடி ரூபாய் நிதியுதவியும் அளிக்க முன்வந்தன. இந்த உதவிகளை ஏற்க மறுத்த அதே நேரம், அந்த நாடுகள் உதவிக்கரம் நீட்டியதற்கு நன்றி தெரிவிக்கப்படுவதாகவும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வெளிநாட்டு அரசுகளின் உதவியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என மத்திய அரசு தெரிவித்ததாக தாய்லாந்து தூதர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கேராளாவில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடந்துவருவதாகவும், சீரமைக்க தேவைப்படும் நிதியை உள்நாட்டிலேயே திரட்ட முடியும் என்றும் மத்திய அரசு வெளிநாட்டு அரசுகளுக்கு தெரிவித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் தான் 2016ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயிவிஜயன், மற்ற நாடுகள் நல்லெண்னத்தில் தரும் நிதியை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கேரளாவில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு வெளிநாடுகள் அளிக்கும் நிதியுதவியை பெறும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. மக்கள் பாதிக்கப்படும் வகையில் ஒரு விதிமுறை இருந்தால் அதை மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். மழை, வெள்ளத்துக்கு 14 லட்சம் பேர் வீடிழந்து தவிக்கும் நிலையில், கேரளாவுக்கு நிதியுதவியை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் சாண்டி வலியுறுத்தியுள்ளார்.