“கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்”- ராகுல்
எந்தவித தாமதமின்றி உடனடியாக கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தை தேசியப் பேரிடராக பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
தென்மேற்கு பருவ மழையால் வரலாறு காணாத அளவிற்கு பெரும் பாதிப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது கேரளா. திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக உள்ளது. 26 ஆண்டுகளில் முதன்முறையாக நிரம்பிய இடுக்கி அணை மற்றும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிந்து வருகின்றன. கோழிக்கோடு, வயநாடு, கொச்சி, திருச்சூர், இடுக்கி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் அதிக அளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவின் இந்த எதிர்பாராத வெள்ளத்திற்கு அண்டை மாநிலங்கள் பலவும் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடியும் இன்று காலை முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். அதனடிப்படையில் முதற்கட்டமாக 500 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பிரதமர் அவர்களே, நம்முடைய லட்சக்கணக்கான மக்கள் வாழமுடியாமல் வாழ்வாதாரங்களை இழந்து ஆபத்தில் உள்ளனர். ஆகவே எவ்வித தாமதமும் இல்லாமல் உடனடியாக கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுகிறேன்”எனப் பதிவிட்டுள்ளார்.