விவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்கும் வங்கிகள் முடிவுக்கு கேரள அரசு தடை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து கடன் தொகையை அதிரடியாக வசூலிக்கும் வங்கிகளின் முடிவுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 2018 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்த கனமழையால் கேரள மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இந்தக் கனமழையால் சாலை மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தால் சாலைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதனால் கேரள மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கேரள மாநிலம் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகின.
மேலும் இந்தப் பெரு வெள்ளத்தில் கேரளாவிலிருந்த விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடைந்தன. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் 12 ஆயிரம் ஹெக்டேர் அளவிலான விளைநிலங்கள் அழிந்துபோயின. இதனால் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்க வேண்டிய நிலை உருவானது. ஒட்டுமொத்த கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களிலிருந்து உதவிகள் வழங்கப்பட்டன. ஆகவே மீண்டும் கேரளா இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. ஆனாலும் முழுவதுமாக இன்னும் மீளவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கொடுத்த கடனை திரும்ப வசூலிக்கும் வேலைகளை பல வங்கிகள் தொடங்கியுள்ளன. ஏறக்குறைய 15 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து உடனடியாக கடன் தொகை வசூல் செய்யப்படும் என்று வங்கிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. இந்த முடிவை எதிர்த்து பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கேரள அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அதிரடியாக கடனை வசூலிப்பது தொடர்பாக ஒரு முடிவை எடுத்துள்ளது. அதன்படி வங்கிகள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன்களை திரும்ப வசூலிக்க வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்தக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக கேரள அரசு 85 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியுள்ளது.