சிறுவனை தூக்கிக்கொண்டு பறந்த ஹெலிகாப்டர் மீட்புக்குழு: வீடியோ
வெள்ளத்தில் சிக்கிய வீட்டிலிருந்து சிறுவனை, கடற்படையின் ஹெலிகாப்டர் மீட்புக்குழு தூக்கிக்கொண்டு பறக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மேலும் துரிதப்படுத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் கடற்படை வீரர்களுக்கான பயிற்சிகளை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தெற்கு நேவல் கமாண்டென்ட் பிறப்பித்துள்ள உத்தரவில், கேரளாவில் போர்க்கால அடிப்படையில் கடற்படை வீரர்கள் மீட்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் பயிற்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையுடன் இணைந்து கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் கடற்படை வீரர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஆலுவா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ள வீடு ஒன்றின் மாடியின் சிறுவன் ஒருவர் நிற்கிறார். அந்தச் சிறுவனை கடற்படை ஹெலிகாப்டர் மீட்புக்குழுவினர், கயிறு மூலம் தூக்கிச்சென்று மீட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.