"உறவினர் மரணத்துக்குப் பின்னால் உடலுறுப்புத் திருட்டு மாஃபியா" - கேரள இயக்குநர் சந்தேகம்

"உறவினர் மரணத்துக்குப் பின்னால் உடலுறுப்புத் திருட்டு மாஃபியா" - கேரள இயக்குநர் சந்தேகம்
"உறவினர் மரணத்துக்குப் பின்னால் உடலுறுப்புத் திருட்டு மாஃபியா" - கேரள இயக்குநர் சந்தேகம்

மலையாள திரைப்பட இயக்குநர் சனல்குமார் சசிதரன் தன் உறவினர் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால், உடலுறுப்புத் திருட்டு மாஃபியா இருப்பதாக சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் கேரளாவில் உடலுறுப்புத் திருட்டு அதிகளவில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கென தனி விசாரணையை கேரளக் குற்றப்பிரிவு போலீஸ் நடத்தி வருகிறது. இந்த நிலையில், மீண்டும் உடலுறுப்புத் திருட்டு சர்ச்சை எழுந்துள்ளது. இந்தமுறை புகாரை எழுப்பியுள்ளவர், கேரள திரைப்பட இயக்குநர் சனல்குமார் சசிதரன். இவருடைய உறவினரான சந்தியா(40 வயது), திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 7ஆம் தேதியே அவர் குணமடைந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், சில நாள்களில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, பிரதே பரிசோதனை செய்யாமலே போலீஸார் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்ததாகவும், ஆனால் உறவினர்கள் பார்த்தபோது, சந்தியாவின் உடலில் சந்தேகப்படும்படியாக கண்களுக்கு கீழே மற்றும் கழுத்து பகுதிகளில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, உறவினர்கள் சடலத்தை தகனம் செய்யாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுக்க, தற்போது சனல்குமார் வாயிலாக விவகாரம் வெளியில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக பேசியுள்ள சனல்குமார் சசிதரன், "சந்தியாவின் பிரேத பரிசோதனை நடைபெற்றதாக காவல்துறை அதிகாரிகள் குடும்பத்தினருக்கு தவறான தகவலை தெரிவித்தனர். இதனால், அவர்கள் உடலை தகனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், சில ஆவணங்கள் இன்னும் மருத்துவமனையில் இருந்து பெறப்படவில்லை என்பதால், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் இறந்தவரின் தகனத்தை தாமதப்படுத்தினர். சந்தியாவின் உடலில் இருந்த காயங்கள் குறித்த எந்த தகவலும் போலீஸாரின் அறிக்கையில் இல்லை.

நானும், சந்தியாவின் சகோதரரும் போலீஸை வற்புறுத்தினோம். சப் இன்ஸ்பெக்டரின் தலையீட்டிற்குப் பிறகுதான் காயங்கள் குறித்த விவரங்கள் போலீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டன. இந்த விவகாரத்தில் உறுப்பு மாற்ற மாஃபியா தலையீடு இருக்கிறதா என்கிற சந்தேகம் இருக்கிறது. காரணம், 2018 ஆம் ஆண்டில் தனது சொந்த விருப்பத்தின்பேரில் சந்தியா கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய முன்வந்துள்ளார். அதற்கான படிவத்தில் கையெழுத்தும் இட்டுள்ளார். இந்தத் தகவலை தன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து சந்தியா மறைத்தாலும், சந்தியாவின் மகளுக்கு மட்டுமே இது பற்றித் தெரியும். அதை ஒரு ரகசியமாக வைத்திருக்கும்படி சந்தியா வற்புறுத்தியதால் அவர் இதை வெளியில் சொல்லவில்லை.

இருப்பினும், அவரது மரணத்தைத் தொடர்ந்து நடந்த இந்தக் குழப்படியான சம்பவங்களால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 'மாஃபியா' இந்த விவகாரத்தில் தலையீடு செய்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இது உண்மையா என்று விசாரிக்க வேண்டும். சந்தியாவின் மரணத்தைச் சுற்றியுள்ள மர்மம் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை தகனம் செய்வதற்கான முயற்சி நடந்ததாக நாங்கள் உணர்கிறோம்" என்று கூறி முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com