கேரளா: செப்டம்பர் மாதத்தில் இருமடங்கான கொரோனா.. அதிர்ச்சியில் சுகாதாரத்துறை..!
கேரளாவில் செப்டம்பர் மாதத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதால் அம்மாநில அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
கேரளாவில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் 75,385 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மாத இறுதியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,20,721 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இறப்பு எண்ணிகையும் ஒரே மாதத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாவது 8 சதவீதமாக உள்ள நிலையில், கேரளத்தில் 12.59 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உச்சபட்ச பாதிப்பு பதிவாகியுள்ளது. கேரளத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 41,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை முதன் முதலாக 5 ஆயிரத்தைக் கடந்தது. இதன் பின்னர் 6 ஆயிரத்தையும், தொடர்ந்து 7 ஆயிரத்தையும், இன்று 8 ஆயிரத்தையும் கடந்துவிட்டது.
கேரளாவில் நாளுக்கு நாள் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அம்மாநில சுகாதாரத் துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதலில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் அக்டோபரில் ஊரடங்கு இல்லை என அறிவித்தார். ஆனால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார்.