1946-ல் பிரிந்த மனைவியை 72 வருடத்துக்கு பிறகு சந்தித்த கணவர்: கேரளாவில் நெகிழ்ச்சி!
சுதந்திர போராட்டத்தின் போது தனது மனைவியை பிரிந்த கணவர், 72 வருடத்துக்குப் பிறகு சந்தித்த சம்பவம் கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் நம்பியார் (90). இவருக்கு 17 வயதாக இருந்தபோது, 13 வயதான சாரதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அது சுதந்திர போராட்ட காலம். 1946 ஆம் ஆண்டில் கண்ணூருக்கு அருகில் கவும்பாயி விவசாய போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. இந்தப் போராட்டத்தை முன் நடத்திச் சென்றவர் நாராயணனின் அப்பா, தளியன் ராமன் நம்பியார். அந்தப் போராட் டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி தேடி கைது செய்தனர். இதனால் தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்கினர், ராமன் நம்பியாரும் நாராயணனும்.
இதற்கிடையே தனியாக இருந்த சாரதா அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு ராமன் நம்பியாரையும் நாராயணனையும் தேடி சென்ற போலீசார், அவர்கள் இல்லாத நிலையில் சாரதாவின் பெற்றோர் வீட்டை தீ வைத்து கொளுத்தினர்.
பின்னர் ஒரு கட்டத்தில் ராமன் நம்பியாரும் நாராயணன் நம்பியாரும் கைது செய்யப்பட்டனர். 1950 ஆம் ஆண்டு சேலம் சிறையில் அடைக்கப் பட்டிருந்த ராமன் நம்பியார் சுட்டுக்கொல்லப்பட்டார். நாராயணனின் உடலிலும் 22 குண்டுகள் பாய்ந்தன. ஆனால், அவர் உயிர் தப்பினார். இன் னும் 3 குண்டுகள் அவர் உடலில் இருக்கின்றன.
சில வருடங்கள் கழிந்த நிலையில் நாராயணன் பற்றிய தகவல் ஏதும் இல்லாததால், சாரதாவுக்கு வேறொருவரை மறுமணம் செய்து வைத் தனர், அவரது உறவினர்கள். இந்நிலையில் 1957 ஆம் ஆண்டு விடுதலையான நாராயணனும் சாரதா பற்றிய தகவல் இல்லாததால் வேறொரு திருமணம் செய்துகொண்டார்.
இதற்கிடையே தனது முதல் மனைவி பற்றி அவருக்கு ஞாபகம் வந்தாலும் அவர் எங்கிருப்பாரோ என்று நினைத்தபடியே தனது வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் சாரதா 6 குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர் கணவர் 30 வருடத்துக்கு முன் இறந்துவிட்டார்.
சமீபத்தில் சாரதாவின் மகன் பார்கவன், எதேச்சையாக நாராயணனின் உறவினரைச் சந்திக்க, இருவரும் பழகியுள்ளனர். பிறகு தங்கள் குடும்பம் பற்றி பார்கவன் சொல்ல, அவர்களுக்கு விஷயம் புரிந்தது. உடனடியாக நாராயணனுக்கு இது தெரிவிக்கப்பட, சாரதாவை சந்திக்க ஆர்வமாகி விட்டார். பின்னர் இரண்டு பேர் குடும்பத்தினரும் இதற்கு ஏற்பாடு செய்தனர்.
முதல் கணவர் நாராயணனைப் பற்றி கேள்விபட்ட சாரதா, அவரை சந்திக்க மறுத்துவிட்டார். பிறகு உறவினர்கள் வற்புறுத்தியதை அடுத்து சம்மதித்தார் சாரதா. இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதும் பேச்சை மறந்தனர். கண்ணீர் ஊற்றெடுத்தது. தனித் தனியாக உட்கார்ந்து கண்ணீர் சிந்தினர்.
பின்னர் சாரதா, ’‘எனக்கு யார் மேலயும் கோபம் இல்லை’’ என்று நாராயணனிடம் சொல்லிவிட்டு தலையை குனிந்துகொண்டார். ‘’அப்புறம் ஏன் ஒண்ணுமே பேசாம, அமைதியா இருக்கே?’’ என்று கேட்டார் நாராயணன். இதையடுத்து அவர்கள் தங்கள் பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டனர்.
இந்த நெகிழ்ச்சி சந்திப்பையொட்டி, பார்கவன் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் இரு குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.