மகளின் மணநிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த தந்தைக்கு திடீர் ‘அட்டாக்’
கேரளாவில் மகளின் திருமண மேடையில் பாட்டுப் பாடிய உதவி ஆய்வாளர் திடீரென மயங்கி உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள நீந்தகரா பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத். இவரது மகள் அர்ச்சாவிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நேற்று) காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. விழா மேடையில் விஷ்ணுபிரசாத் மகிழ்ச்சியுடன் சினிமா பாடல் பாடியுள்ளார். அப்போது திடீரென தடுமாறிய அவர், நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் மயங்கி விழும் போது அங்கு மகள் அர்ச்சா இல்லை. இதனால் அவருக்கு இந்தச் சம்பவம் தொடர்பாக எதையும் உறவினர்கள் கூறாமல் மறைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலையில் விஷ்ணுபிரசாத் இறந்துவிட்டார். தந்தை இறந்து தெரிந்தால் திருமணத்தை நிறுத்திவிடுவார் என அதையும் அர்ச்சாவிடம் உறவினர்கள் கூறவில்லை. இந்நிலையில் நேற்று காலை திருமண மேடைக்கு வந்த மணமகள் அர்ச்சா சிறிது நேரத்தில் தந்தை எங்கே எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவரை தேடவும் செய்துள்ளார். ஆனால் அங்கிருந்து உறவினர்கள், தந்தை அருகில் எங்கோ சென்றுள்ளதாக கூறியுள்ளனர். அத்துடன் நேரம் செல்வதாக கூறி திருமணத்தையும் முடித்துள்ளனர்.
திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கே அர்ச்சா சென்றுவிட்டார். ஆனால் அவருக்கு உண்மையை யாரும் கூறவில்லை. இந்நிலையில் இன்று தந்தையின் இறுதி ஊர்வலம் நடைபெறுவதற்கு முன்னர் அர்ச்சாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த அவர் உடைந்து போய், கதறி அழுதுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான செய்தியை ‘தி நியூஸ் மினிட்’ இணையதளம் வெளியிட்டுள்ளது.