விஸ்வரூபம் எடுக்கும் தங்கக் கடத்தல்: பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் கடிதம்!!

விஸ்வரூபம் எடுக்கும் தங்கக் கடத்தல்: பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் கடிதம்!!
விஸ்வரூபம் எடுக்கும் தங்கக் கடத்தல்: பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் கடிதம்!!

தங்கக் கடத்தல் தொடர்பாக ஏஜென்சிகளை உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டுமென பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக விலாசத்திற்கு, விமானம் மூலம் வந்த 13 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை கேரள சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐ.டி., பிரிவின் தற்காலிக ஊழியராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ் சிக்கியிருப்பது கேரள அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வப்னா சுரேஷ், தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐ.டி., துறையில் பணியாற்றுகிறார். இவருக்கான ஆறு மாத ஒப்பந்த பணி கடந்த ஜூன் மாதமே முடிந்தும் அவர் கேரள அரசின் ஐ.டி., துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் “ஸ்பேஸ் பார்க்'' க்கில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஸ்வப்னா சுரேஷின் வீட்டிற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அங்கு பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஸ்வப்னா சுரேஷிற்கும் கேரள ஐ.டி., துறையின் செயலாளராக இருக்கும் சிவசங்கருக்கும் தொடர்பு இருந்ததாகவும், சிவசங்கர் அடிக்கடி ஸ்வப்னா சுரேஷின் வீட்டிற்கு வந்து செல்வதையும் ஸ்வப்னா சுரேஷ் வசிக்கும் பிளாட்டின் சுற்றுப்புறமுள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்ததை சுங்கத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

ஒரு கடை நிலை ஊழியர் வீட்டிற்கு துறையின் அரசு செயலர் வந்து செல்வதும் சுங்கத் துறையினருக்கு சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் சிக்கியதும் கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து இரண்டு மூத்த அதிகாரிகள் சுங்கத் துறையினருக்கு பேசி பரிந்துரைத்ததாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கேரள தலைமைச் செயலகம் கடத்தல்காரர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் முதல்வர் அலுவலகத்துக்கும் தங்கக் கடத்தலுக்கும் தொடர்பு உள்ளது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சிபிஐ விசாரணை மட்டுமல்ல எந்த விசாரணைக்கும் தயார் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் அனைத்து ஏஜென்சிகளையும் உட்படுத்தி உடனடி விசாரணைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக் கடத்தலின் பிறப்பிடம் முதல் அது சென்றடையும் இடம் வரையிலான அனைத்தும் விசாலமாக கண்டறிப்பட வேண்டும். குற்ற வழக்கில் அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டும். விசாரணை ஏஜென்சிகளுகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com