"சனாதன தர்மம் என்பது சாதி அடிப்படையிலானது" - கடுமையாகச் சாடிய பினராயி விஜயன்.. பாஜக எதிர்ப்பு!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா நகராட்சியில் உள்ள சிவகிரி ஸ்ரீநாராயண குரு மடம் சார்பில் யாத்திரை மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பினராயி விஜயன், ”சனாதன தர்மம் என்பது சாதி அடிப்படையிலான சமூக அமைப்பே தவிர வேறொன்றும் இல்லை. நாராயண குரு பரிந்துரைத்த புதிய யுகமான மனித நேய தர்மம் காலத்துடன் நிற்கிறது. சனாதன தர்மத்தின் கட்டமைப்பில் குருவை நிலைநிறுத்த முயற்சிப்பது துறவியை அவமதிக்கும் செயலாகும்.
வர்ணாஸ்ரம தர்மம் என்பது சனாதன தர்மமத்திற்கு சார்ந்ததாகவோ அல்லது ஒருங்கிணைந்த பகுதியாகவோ உள்ளது. நாராயண குருவின் துறவு வாழ்க்கை முழு சாதுர்வர்ண அமைப்பையும் கேள்விக்குறியாக்கியது மற்றும் மீறியது. சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவை வெறும் மதத் தலைவராகவோ அல்லது ஒரு மத துறவியாகவோ குறைத்து மதிப்பிடும் முயற்சிகள் உணரப்பட வேண்டும்.
குருவுக்கு மதமும் இல்லை, ஜாதியும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். யாரேனும் ஒரு குருவை சாதி அல்லது மதத்தின் எல்லைக்குள் கொண்டுவர முயன்றால், அவரை அதற்கு மேல் அவமதிக்க முடியாது. இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனப் பேசினார்.
இதனிடையே, பினராயி விஜயனின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பினராயி விஜயன் இந்து மதத்தை அவமதித்துவிட்டதாகவும், வாக்குகளுக்காக இதுபோல் பேசி வருவதாகவும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா கூறியுள்ளார்.
“பினராயி விஜயன் பேசியது சனாதன தர்மத்தை வெறுக்க வேண்டும் என்பதுதான். அவரது கருத்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதன் தொடர்ச்சியே" என்று பாஜக மூத்த தலைவர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.