நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள வயநாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 350 ஐ கடந்துவிட்டது. இந்நிலையில், மீட்புப்பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் 200க்கும் அதிகமானோரை காணவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
வயநாட்டில் நடந்துவரும் மீட்புப்பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “81 பேர் பலத்த காயம் அடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 67 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் அவர்களின் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும்.
தீயணைப்புப்படையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், வனத்துறை, காவலர்கள், இந்திய ராணுவம், தமிழ்நாட்டில் இருந்து 1,419 பேர் தொடர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சூரல்மலையில் மட்டும், 866 காவல்துறையினர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
K-9 squads மற்றும் தமிழ்நாடு மருத்துவக் குழுவினரும் மீட்புப் பணிகளில் பங்கேற்றுள்ளனர். Human Rescue Radar மற்றும் drone-based radar ஆகியவையும் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், உள்ளூர் மக்களும் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளை விரைவில் கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்வார்.
குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பேரிடர் எச்சரிக்கை அமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வயநாடு பேரிடருக்கான காரணத்தை அறிய விரிவான விசாரணை நடத்தப்படும்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பல உடல்கள் கிடைத்துக்கொண்டிருக்கும் நிலையில், உடல் பாகங்களும் கண்டெடுக்கப்படுவதால் டிஎன்ஏ சோதனைக்காக மாதிரிகளை சேகரித்தபின் அடக்கம் செய்யப்படும். கண்டெடுக்கப்படும் உடல்பாகங்கள் அடையாளம் காணப்படமுடியாவிட்டால், அத்துடன் கிடைத்த பொருட்கள் வீடியோ எடுக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.