ஜெ. அன்பழகன் மறைவுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்
எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைவிற்குக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மூச்சுத் திணறலால் கடந்த 2-ஆம் தேதி குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 08.05 மணிக்குக் காலமானார்.
இதனையடுத்து, கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர். ஜெ.அன்பழகன் மறைவிற்குப் பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழக அரசியல்வாதி ஜெ. அன்பழகன் மறைவு செய்தி கேட்டுத் துயருற்றோம்.
கொரோனாவுடன் போராடி அவர் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கேரள மக்கள் சார்பாக எங்களது அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்