சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டுக்கள்
ஆந்திர மாநிலத்தில் மக்களுக்காக சுட்டுகாட்டில் தூங்கிய தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆந்திர மாநிலம் பாலகோல் தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம நாயுடு. அவரின் தொகுதியில் இருக்கும் சுடுகாட்டை புனரமைக்க அரசு மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால் பேய், பிசாசு அச்சத்தில் இருந்த ஒப்பந்ததார்கள் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் ஒருவர் முன்வந்தார். இருப்பினும், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை.
அதனையடுத்து, ராம நாயுடு, கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வந்து அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டு அங்கேயே தூங்கினார். அவரது இந்த அதிரடி செயலின் பலனாக 50 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். இதனால், மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, பேய், பிசாசு பயத்தை போக்கவே இரவு முழுவதும் மயானத்தில் தூங்கியதாக தெரிவித்தார். விரைவில் அனைத்து வசதிகளும் கொண்ட நவீன சுடுகாடாக இது மாற்றப்படும் என கூறினார். அதோடு, என்னை அச்சுறுத்தியது ஆவி அல்ல கொசுக்கள் தான் என்று கிண்டலாக கூறினார். பின்னர், இரண்டாவது நாள் கொசு வலையுடன் வந்து தூங்கினார்.
இதனையடுத்து, எம்.எல்.ஏ ராம நாயுடு சுடுகாட்டில் தூங்குவது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலரும் அவரது இந்தச் செயலுக்காக பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தனது செயலால் தன்னுடைய மாநிலத்தை தாண்டி அந்த எம்.எல்.ஏ கவனம் பெற்று வருகிறார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ராம நாயுடுவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ராம நாயுடுவை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். ராம நாயுடுவின் மூட நம்பிக்கைக்கு எதிரான செயல் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ள அவர், அற்பமான சடங்குகள், மூர்க்கமான மூடநம்பிக்கைக்கு எதிரான இந்தச் செயல் தேசிய அளவில் கவனம் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.