கேரளா: செல்போன் வெடித்ததால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் - போலீசார் விசாரணை
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவல்லாமலை பகுதியில் பட்டிப்பறம்பை சேர்ந்தவர்கள் அசோக்குமார் - சௌமியா தம்பதியர். இவர்களது ஒரே மகள் ஆதித் ஸ்ரீ (8).
நேற்றிரவு இவர்கள் விட்டின் ஒரு அறையில் திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அசோக்குமார் - சௌமியா தம்பதியர் அந்த அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது தங்களது குழந்தை துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து இவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பழயன்னூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆதித் ஸ்ரீ வைத்திருந்த மொபைல் போன் வெடித்துள்ளது என்பதும் அதில்தான் அவர் உயிரிழந்தார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வெடித்துச் சிதறிய மொபைல்போன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டது என்பதும், இந்த போனில் பேட்டரி மோசமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.