நிறப் பாகுபாடு சர்ச்சை | ”கருப்பாக இருப்பது அவமானம்?..” - கேரள தலைமைச் செயலாளரின் உருக்கமான பதிவு!
உலகம் முழுவதும் இனவெறிப் பிரச்னை இன்னும் தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. அந்த வகையில், தற்போது இந்த விவகாரம் கேரளாவிலும் புயலைக் கிளப்பியுள்ளது. நிறப் பாகுபாடு குறித்து தன்மீது சுமத்தப்படும் கருத்துகளுக்கு கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பான பதிவு ஒன்றையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்தக் கருத்தை யார் வெளியிட்டார்கள் என்பதை சாரதா முரளீதரன் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த குறிப்பிட்ட சம்பவத்தால் தான் புண்பட்டதால், அதை வெளியே சொல்ல விரும்புவதாகக் கூறியுள்ளார்.
கேரளாவில், தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர், வி.வேணு. அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அவருடைய மனைவி சாரதா அந்தப் பொறுப்பை ஏற்றார். 1956ஆம் ஆண்டு மாநிலம் உருவான பிறகு, ஐ.ஏ.எஸ் தம்பதியினர் இடைவிடாமல் அடுத்தடுத்து தலைமைச் செயலாளர்களாக பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும். வேணு மற்றும் சாரதா இருவரும் 1990 ஐ.ஏ.எஸ் பேட்ச்சைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நிறப் பாகுபாடு குறித்து, தான் எதிர்கொண்ட சம்பவத்தை அவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். அதில், "என் கருமை நிறத்தை நான் உடைமையாக்கிக் கொள்ள வேண்டும்" என்று முதலில் குறிப்பிட்ட பதிவை நீக்கிய சாரதா, பின்னர் அதற்கு விளக்கும் அளிக்கும் விதமாக மற்றொரு பதிவை வெளியிட்டார்.
அதில், "சில சலசலப்பான பதில்களால் நான் குழப்பம் அடைந்தேன். இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று என் நலம் விரும்பிகள் கூறினர். அவர்களுடன் உடன்படுவதன் காரணத்தினால், மீண்டும் இதனைப் பதிவிடுகிறேன். இந்த ஒரு சம்பவத்தை மட்டும் நான் ஏன் தனியாக குறிப்பிட வேண்டும்? ஆம், நான் காயப்பட்டேன். இதற்கு முன்னர் இதே பதவியில் என் கணவர் இருந்ததைத் தொடர்ந்து, கடந்த 7 மாதங்களாக பல ஒப்பீடுகளை நான் கண்டுள்ளேன். நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன்.
நான் கருப்பான பெண் என்று முத்திரை குத்தப்பட்டேன். கருப்பாக இருப்பது அவமானம் என்ற அளவில் கூறுகின்றனர். கருப்பு நிறத்தை ஏன் இழிவுபடுத்தப்பட வேண்டும்? கருப்பு என்பது பிரபஞ்சத்தின் எல்லாவற்றிலும் பரவியிருக்கும் உண்மை. கருப்பு என்பது எதையும் உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது. மனித குலம் உணர்ந்த சக்தியின் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருப்பு இருக்கிறது. கருப்பு வண்ணம் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும். ஆடை முதல் கண் மை எனப் பலவற்றில் கருப்பு நிறம் இருக்கிறது.
கருப்பு என்பது நல்ல நிறம் இல்லை என்று கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நான் புதைந்துவிட்டேன். இந்த நிலை என் குழந்தைகள் பிறந்த பின்னர் மாறியது. கருப்பு நிறத்தில் மகிழ்ச்சியாகவும், அழகாகவும் இருப்பதாக என் குழந்தைகள் கூறினர். மற்றவர்களால் உணர முடியாத அழகை, என் குழந்தைகள் அறிந்துகொண்டனர். கருப்பு மிகவும் அழகாக இருக்கிறது என்பதை என் குழந்தைகள் எனக்கு உணர்த்தினார்கள்” என தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்தப் பதிவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். "அன்புள்ள சாரதா முரளீதரன், நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் மனதைத் தொடுகிறது. விவாதிப்பதற்கு தகுதியான கருப்பொருளாக இது மாறி இருக்கிறது. என் தாயாரும் கருமை நிறம்தான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.