
கேரள மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரி பகுதியில் இன்று காலை கிறிஸ்தவ ஜெபக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது 10 நிமிட இடைவெளியில் இரண்டு முறை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் என்ஐஏ கொச்சி யூனிட் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், கேரள அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. கேரளா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி மூலம் கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் பேசியுள்ளார்.
களமச்சேரி வெடி விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. காயமடைந்தவர்களில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் சென்றுள்ளனர். தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து விசாரணைகளுக்குப் பிறகே கூறமுடியும் என கேரள முதல்வர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
இந்த குண்டு வெடிப்பு விபத்தில் 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விடுப்பெடுத்த அனைத்து மருத்துவர்களும் உடனடியாக பணிக்குத் திரும்பி வர உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜோர்ஜ் தெரிவித்தார்.
வெடி விபத்து நடந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்த தடையங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது என கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில தலைவர் எம்வி.கோவிந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.