கேரளாவில் இரவு நேரங்களில் கொரோனா தொற்றுடைய பெண்களை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல தடை!
கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்களை இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்துச்
செல்ல கேரள சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளம் பகுதியை சேர்ந்த கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 18 வயது இளம்பெண் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்சை ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்தை சேர்ந்த நவ்ஃபல் என்பவர் ஓட்டிச்சென்றார்.
ஆம்புலன்ஸ் திருவனந்தபுரம் அரன்முல்லா விமான நிலையம் அருகே வந்தபோது அங்கே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி, ஆம்புலன்ஸ்சிற்குள்ளேயே அந்த இளம்பெண்ணை ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கொரோனா பாதித்த பெண்ணிற்கு, சிகிச்சைகாக அழைத்துச் சென்ற அரசின் 108 ஆம்புலன்ஸ்சில் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனாராலேயே நிகழ்ந்த இந்த கொடூரம், கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ்சுகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்களை இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
“பகலில் ஆம்புலன்ஸ் வரும் வரை நோய் பாதித்த பெண்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும். அவரசமான கால கட்டங்களில் பெண்களை அழைத்து செல்வது குறித்து சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் ஒரு சுகாதார பணியாளரை துணைக்கு அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும்” போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.