திருநங்கைகள் வாழ்வில் புது வெளிச்சம் - கல்லூரிகளில் இடஒதுக்கீடு

திருநங்கைகள் வாழ்வில் புது வெளிச்சம் - கல்லூரிகளில் இடஒதுக்கீடு
திருநங்கைகள் வாழ்வில் புது வெளிச்சம் - கல்லூரிகளில் இடஒதுக்கீடு

கல்லூரி, பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு அளித்த கேரள அரசின் முடிவை திருநங்கைகள் சமூகத்தினர் வரவேற்றுள்ளனர். 

திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் ஏராளமான சிக்கல் உள்ளது. தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ள அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். குடும்பம், சமூகம் என அனைத்து இடங்களிலும் அவர்கள் புறக்கணிப்புக்கு ஆளாகிறார்கள். இத்தனை இருந்தும் திருநங்கைகளில் பலர் பல்வேறு துறைகளில் சாதனைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். டிவி தொலைக்காட்சி துறை உள்ளிட்ட பல இடங்களில் அவர்கள் கால்பதித்து வருகிறார்கள்.

இந்தியாவில் முதல் திருநங்கை போலீஸ் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த பிரித்திகா யாசினி சில ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்றார். சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி பணியாற்றி வருகிறார். அதேபோல், இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்தியஸ்ரீ சர்மிளா சமீபத்தில் பொறுப்பேற்றார். இப்படி பல்வேறு துறைகளில் அவர்கள் கால்பதிக்க முயற்சித்து வந்தாலும், அவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் தேவைப்படுகிறது. 

இதனை உணர்ந்து கொண்ட கேரள இடது முன்னணி அரசு, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. திருநங்கை மாணவிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சமூக நீதித்துறை பரிந்துரை செய்ததை அடுத்து, கேரள அரசின் உயர் கல்வித் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக கேரள அரசின் கூடுதல் செயலாளர் ரஞ்சித் குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களில் தகுதி உள்ள திருநங்கை மாணவிகளுக்கு கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் காரணமாக திருநங்கைகள் தங்களது கல்வியை பாதியில் கைவிடும் சூழல் நிலவி வருவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறியுள்ளது. கேரள அரசின் இந்த முடிவிற்கு திருநங்கைகள் வரவேற்றுள்ளனர். 

திருநங்கை சமுதாயத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான மாத வருமானத்தை கொண்டு வாழ்வை நடத்த வேண்டிய சூழலில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகின்றது. அதேபோல், 28.53 சதவீதம் பேர் ரூ.1000 முதல் ரூ.5000 வரை மாத வருமானம் பெறுவோர் உள்ளனர். 19.46 சதவீதம் பேர் ரூ.5 ஆயிரம் முதல் 10,000 ரூபாய் வரை மாத வருமானம் ஈட்டுகின்றனர். 20.35 திருநங்கைகள் வேலைவாய்ப்பில்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். 30 சதவீதம் பேர் சில சுய தொழில்களை செய்து வருகிறார்கள். 

திருநங்கைகளின் இந்த சிரமங்களை கருத்தில் கொண்டு, உலக அளவில் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசுகள் முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்கள். ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் உள்ள பல்கலைக் கழகத்திலும் 2020ம் ஆண்டு முதல் திருநங்கை மாணவிகளை சேர்ப்பது என்று முடிவு செய்துள்ளார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com