கொச்சி: இடிந்து விழுந்த அங்கன்வாடி; குழந்தைகள் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்ப்பு!
கொச்சியில் அங்கன்வாடி இடிந்து விழுந்துள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு வர தாமதமானதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. என்ன நடந்தது? பார்க்கலாம்...
கொச்சியை அடுத்த திருப்புனித்துறை அருகே கந்தநாடு என்ற கிராமத்தில் ஒரு அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியில் 5 குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலை 10 மணிக்கு அங்கன்வாடிக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று 9.30 மணியளவில் அங்கன்வாடியில் பணிபுரிந்து வரும் பணிப்பெண் ஒருவர், அறைகளை சுத்தம் செய்து வந்துள்ளார். அப்போது திடீரென்று முகப்பில் முறிவு சத்தம் கேட்கவே, சுதாரித்துக்கொண்ட பணிப்பெண், அங்கிருந்து வேகமாக வெளியேறி இருக்கிறார். அடுத்த நிமிடம் அங்கன்வாடியின் மேற்கூறையானது பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது.
நல்லவேளையாக அச்சமயம் அங்கன்வாடியில் குழந்தைகள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதே போன்று அப்பெண் வெளியே வர தாமதித்து இருந்தாலும், மேற்கூரையானது அவரின் மேல் விழுந்து விபத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.
அங்கன்வாடியில் நாளை கிரிஸ்துமஸ் கொண்டாட்டம் நடக்கவிருந்த நிலையில் இன்று நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பணிப்பெண் கூறியபொழுது, “குழந்தைகள் வந்தபிறகு விபத்து ஏற்பட்டு இருந்தால், இச்சம்பவம் என் மனதில் ஆறாத வடுவாக மாறியிருக்கக்கூடும்” என்றுள்ளார்.
முன்னதாக, அங்கன்வாடி பழுதானது குறித்து பஞ்சாயத்தில் புகாரளிக்கப்பட்டு இருந்துள்ளது. இருப்பினும் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். அதேநேரம், அங்கு பயின்று வந்த குழந்தைகள் சிலரை அருகில் இருக்கும் வேறொரு கட்டடத்திற்கு மாற்றிய நிலையில், அங்கன்வாடி மட்டும் இங்கு செயல்பட்டு வந்ததாக பள்ளி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.