கீழடி 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி : பல்வேறு பொருட்கள் கண்டுபிடிப்பு
கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 2 முதுமக்கள் தாழிகள் மற்றும், மண் ஓடுகள், பாசி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 19ஆம் தேதி முதல் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடியில் மட்டுமே நடைபெற்ற நிலையில் இதன் தொடர்ச்சியை அறியும் வகையில், கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட 4 இடங்களில் சேர்த்து 122 ஏக்கர் பரப்பில் விரிவான அகழ்வாராய்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொந்தகை ஈமக்காடு பகுதியில் நடத்திய ஆய்வில், இரண்டு முதுமக்கள் தாழிகளும், ஏராளமான மண் ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை இன்னும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்படவில்லை. அதேபோல, கீழடியில் நடைபெறும் அகழ்வாய்வில், ஏராளமான பாசி மணிகளும், மண்பாண்ட ஓடுகளும், எலும்புத்துண்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கிடையே கீழடி பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சிப் பொருட்களையும், பணிகளையும் காண மக்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.