குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.5000: எஸ்பிஐ முடிவு
வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் இருப்பு வைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்க, எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. வங்கியின் இணைய தளத்தில் வெளியாகியுள்ள இந்த அறிவிக்கையில் இருப்புத் தொகை குறைவதற்கு ஏற்பட, அபராதக் கட்டணம் வசூல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டும் என்ற நடைமுறையை, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, பெருநகரங்களில் சேமிப்புக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய், நகர்ப்புறங்களில் 3 ஆயிரம் ரூபாய் என குறைந்தபட்சமாக இருப்புத் தொகைக்கு வரம்பு நிர்ணயம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
புறநகரப் பகுதிகளில் 2 ஆயிரம் ரூபாய், கிராமப் புறங்களில் 1000 ரூபாய் என குறைந்தபட்ச சேமிப்பிற்கு வரைமுறை செய்யவுள்ளதாகத் தெரிகிறது. இருப்புத் தொகை குறைவாக இருப்பதற்கேற்றவாறு அபராதம் பிடித்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உதாரணமாக, பெருநகரங்களில், நிர்ணயிக்கப்பட்டதை விட 75 சதவிகிதம் இருப்புத் தொகை குறைவாக இருந்தால் 100 ரூபாயுடன் சேவை வரியும் பிடித்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நகரப்புறங்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால், 40 ரூபாய் அபராதத்துடன் சேவை வரி பிடித்தம் செய்யவும் முடிவு செய்துள்ளது.