வீரர்களின் பயணத்தில் ரகசியம் காக்க வேண்டும்: ரயில்வே உத்தரவு
ரயில்களில் ராணுவ வீரர்கள் பயணம் செய்வதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என ரயில்வேதுறை உத்தர விட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்தியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
இந்நிலையில், ரயில்களில் ராணுவ வீரர்கள் பயணம் செய்வதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. மண்டல அலுவலகங்களுக்கு கடந்த 16 ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் ரயில்வே துறை, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
அந்த உத்தரவில், ராணுவ வீரர்கள் பயணம் செய்வதையோ, ராணுவ உபகரணங்கள் எடுத்துச் செல்வது பற்றியோ ரகசியம் காக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரி தெரிவித்தார்.