இப்படியும் ஒரு கொடூரம் - எங்கே செல்கிறது நாடு..!

இப்படியும் ஒரு கொடூரம் - எங்கே செல்கிறது நாடு..!

இப்படியும் ஒரு கொடூரம் - எங்கே செல்கிறது நாடு..!
Published on

ஜம்மு, காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் எட்டு‌வயது சிறுமி கடந்த ஜனவரி 10 ஆம் தேதி காணாமல் போனாள். காணாமல் போய் ஒருவாரத்திற்குப்பிறகு Rassana வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் குற்றப்புலனாய்வுத்துறை நடத்திய விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து சிறுமியை வழிபாட்டுத்தலம் ஒன்றில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது. சிறுமிக்கு உணவு கூட தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியை மயக்கத்தில் வைத்திருக்க பயன்படுத்திய மருந்தால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது.

முதலில் கடத்திச்சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 18 வயது நிரம்பாத சிறுவனுடன் சேர்ந்து மேலும் 6 பேரும், விசாரணை நடத்தச்சென்ற காவல் அதிகாரி ஒருவரும் சிறுமிக்கு பாலியல் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். மேலும் பாலியல் கொடூரக்குற்றம் வெளியே தெரியாமல் இருக்க ரத்தக்கறை படிந்த ஆடைகளையும் ஆதாரங்களையும் அழித்ததாக மேலும் இரு காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து துவைக்கப்பட்ட ஆடையில் உள்ள ரத்தக்கறை அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் டெல்லி தடயவியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளியான 18 வயது நிரம்பாத சிறுவன், 8 வயது சிறுமியை அடித்துக்கொலை செய்ததும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குற்றம் தொடர்பாக 130 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. இத்தகைய குற்றம் புரிந்த குற்றவாளிகளை எப்படி யாரும் பாதுகாக்க முயல முடியும் என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மனித குலத்திற்கே‌எதிரானவை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். அத்தகைய குற்றம் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்

மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம் என்று வேதனை குரலை பதிவு செய்துள்ளார் மத்திய‌அமைச்சர் விகே சிங். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், நிச்சயம் அந்த சிறுமிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி, உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த ‌பேரணியில் பாரதிய ஜனதா கட்சியைச்சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றதற்கு மெகபூபா எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று எதிர்க்கட்சித்தலைவரான தேசிய மாநாட்டுக்கட்சித்தலைவர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்க கதுவா வழக்கறிஞக்ள் முயன்ற சம்பவம் கடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com