“ராகுல் காஷ்மீருக்கு வரவேண்டிய அவசியமில்லை” - காஷ்மீர் ஆளுநர்
தற்போதைய சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீருக்கு வர வேண்டிய அவசியமே இல்லை என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஜம்மு- காஷ்மீரின் நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டுமென்றால் ராகுல் காந்தி வரட்டும் என்றும், ஏற்கெனவே கூறிய பொய்யை மீண்டும் கூறட்டும் என்றும் தெரிவித்துள்ளார். நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அவரை காஷ்மீருக்கு வரும்படி தாம் அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் ராகுல் அதை அரசியலாக்கிவிட்டார் என்றும் சத்யபால் மாலிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போதைய சூழலில் தேச நலனை கருத்தில் கொண்டே அரசியல் கட்சிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுலுடன் எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக ஜம்மு- காஷ்மீர் சென்றது. ஆனால் ஸ்ரீநகரிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.