கார்த்தி சிதம்பரத்திற்கு 13 நாள் நீதிமன்றக் காவல்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை 13 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். நீதிமன்ற அனுமதியோடு லண்டன் சென்று சென்னை திரும்பிய அவரை சிபிஐ கடந்த 28ஆம் தேதி கைது செய்தது. சென்னை விமான நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சிபிஐ காவலில் உள்ளவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
கார்த்தியின் 3 நாள் சிபிஐ காவல் முடிந்ததை அடுத்து, அவர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சுனில் ராணா முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கார்த்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரி, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் வி.கே.சர்மா மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, கார்த்தியை வரும் 24ஆம் தேதி வரை, அதாவது 13 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதேவேளையில், ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே தாக்கல் மனு மீது இன்றே விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.