ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
பிரிட்டனிலிருந்து இன்று காலை சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கார்த்தி ஒத்துழைக்கவில்லை எனக்கூறி, அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கார்த்தி சிதம்பரம் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு தற்போது சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டவர்களிடமிருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெற, வெளிநாட்டு முதலீட்டு வாரியம் அனுமதி மறுத்ததை நீதிமன்றத்தில் எடுத்துக் கூற சிபிஐ திட்டமிட்டுள்ளது. அந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண, கடந்த 2007 இல் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் உதவியை நாடி, அதற்கு பத்து லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக ஐஎன்எக்ஸ் மீடியா உரிமையாளர் இந்திராணி முகர்ஜி ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.