கர்நாடகா இடைத்தேர்தல் நிலவரம்... ஒரு தொகுதியில் பாஜக முன்னிலை; 4-ல் பின்னடைவு
கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற மக்களவை தொகுதிகளில், காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளன. முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா, ராமநகரம் சட்டப்பேரவை தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
கர்நாடகாவில் உள்ள ஷிமோகா, பெல்லாரி, மாண்டியா ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகரா மற்றும் ஜமகண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
ஷிமோகா மக்களவை தொகுதியில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஐக்கிய ஜனதா தள கட்சி வேட்பாளரை விட சுமார் 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
பெல்லாரி மக்களவை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் விஎஸ் உக்ரப்பா பாரதிய ஜனதா வேட்பாளர் சாந்தாவைவிட சுமார் ஒரு லட்சத்து 28 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். மாண்டியா மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஜாம்கண்டி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் சித்து யமகௌடா முன்னிலையில் உள்ளார். இதேபோன்று ராமநகரா சட்டப்பேரவை தொகுதியில், முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி அனிதா சுமார் 14 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கின்றார்.