ஈரான் | அலி காமேனி மரணம்.. 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் கர்நாடக கிராமம்.. ஏன் தெரியுமா?
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதையொட்டி, அலிபுர் கிராமம் 3 நாள் துக்கம் அனுசரிக்கிறது. இந்தக் கிராமம் 'மினி ஈரான்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதன் பெரும்பான்மையான ஷியா முஸ்லிம் மக்கள் ஈரானின் கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கபல்லாபூர் மாவட்டம், கௌரிபிதனூர் தாலுகாவில் அலிபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதையொட்டி மார்ச் 1 முதல் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அலிபூரில் 25,000 ஷியாக்களும், அருகிலுள்ள பொட்டெனஹள்ளியில் 1,000 ஷியாக்களும் வசிக்கின்றனர்.
1986ஆம் ஆண்டு ஈரானின் அதிபராக காமேனி பதவி வகித்தபோது, அலிபூரில் ஒரு மருத்துவமனையைத் திறந்து வைப்பதற்காக அந்தக் கிராமத்திற்கு வந்திருந்தார் .
அலிபூர் கிராமம் ஞாயிற்றுக்கிழமை துக்கத்தில் மூழ்கியது. அதன் பெரும்பான்மையான ஷியா முஸ்லிம் சமூகம் தெஹ்ரானில், அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்தது.
அலிபூர் நீண்டகாலமாக 'மினி ஈரான்' என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது. அதன் பெரும்பான்மையான ஷியா முஸ்லிம் மக்கள்தொகை மற்றும் ஈரானின் ஆழமான வரலாற்று கலாசாரததைப் பின்பற்றுகிறது. காமேனி இறந்த நாளன்று, அதிகாலையில் இருந்தே தாமாகவே முன்வந்து கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளை வியாபார்கள் அடைத்தனர். மக்கள் குழுக்களாகக் கூடி கண்ணீருடன் காமேனியின் உருவப்படங்களை ஏந்தி இரங்கல் தெரிவித்தனர். பலர் துக்கத்தின் அடையாளமாக கருப்பு உடை அணிந்திருந்தனர்.
ஈரானுடனான இந்தக் கிராமத்தின் பிணைப்பு, மதத்தைவிட ஆழமானது. இந்தக் கிராமத்தின் அசல் பெயர் பெல்லிகுண்டே என்றும், பிஜாப்பூர் அடில்ஷாஹிக்களின் (Bijapur Adilshahis) காலத்தில், ஷியா முஸ்லிம்களின் ஒரு குழு இப்பகுதிக்கு குடிபெயர்ந்து வந்து அதற்கு ’அலிபூர்’ என்று பெயர் மாற்றியதாகவும், பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வர்த்தகம் மற்றும் கல்விக்காக ஈரான் மற்றும் அரபு நாடுகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் ஆசியாநெட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுடனான எங்கள் தொடர்பு, வர்த்தகம் மற்றும் கல்வி பற்றியது மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் மத வழிகாட்டுதல் பற்றியதும்கூட என்று அலிபூரைச் சேர்ந்த பிரபல உருது கவிஞரும் முன்னாள் பத்திரிகையாளருமான ஷஃபீக் அபிடி தெரிவித்துள்ளார்.

