கர்நாடகா: கார் மீது லாரி மோதிய கோர விபத்து – கோயிலுக்குச் சென்று திரும்பிய 4 பேர் உயிரிழப்பு
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநில சித்ரதுர்கா மாவட்ட சென்னபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹம்பய்யா. இவர் தனது தனது மனைவி பிரேமா, மற்றும் மஞ்சய்யா, பிரபாகர் ஆகியோர் காரில் தர்மஸ்தலம் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சிக்கமங்களுர் மாவட்ட மூடிகேரே அருகே பனக்கல் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, மூடிகேரே பகுதியில் இருந்து கொட்டிக்கேஹாராகே பகுதிக்குச் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.