கர்நாடகா| ”இப்ப புரியுதா எப்டி காது கிழியும்னு” ஹாரன் எழுப்பிய பேருந்து ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை!
பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருப்பதால், பெரும்பாலும் பேருந்து ஓட்டுநர்கள் ஏர் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக ஒலி எழுப்பப்படுவதுடன், அது பிற வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவில் தொடர்ந்து அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் உபயோகித்த பேருந்து ஓட்டுநர்களைப் பிடித்து, போக்குவரத்துக் காவலர்கள் விதித்த நூதனமான தண்டனை இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, அதுபோன்ற ஒலியை எழுப்பிய ஓட்டுநர்களை, காவலர்கள் மடக்கிப் பிடித்து, வாகனத்திலிருந்து கீழே இறக்கி அந்த ஒலி வரும் இடத்தில் காதைவைத்து, ஏர் ஹாரனை ஒலிக்க விடுகின்றனர். இதனால், அந்த ஓட்டுநர்கள் அதன் சித்திரவதையை அனுபவிக்கின்றனர். பிறகு அவர்களிடம் காவலர்கள், “இதுபோன்றுதானே மற்றவர்களுக்கும் நீங்கள் எழுப்பும் சத்தம் இடையூறுகளை உருவாக்கும்” என அறிவுரை கூறுகின்றனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. காவலர்களின் இந்த அறிவுரைக்கு பயனர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.