மைசூருவில் நிவாரண நிதி பற்றிய ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளிடம் பெண் வட்டாட்சியர் ஆவேசமாக பேசி ஆவணங்களை தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகம் மாநிலம் முழுவதும் தொடர் கனமழை பெய்து வந்தது. அதுபோல் மைசூருவிலும் தொடர் கனமழை பெய்ததால் ஏராளமான விவசாய நிலங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் எச்.டி.கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு தாசில்தார் ரத்னாம்பிகா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்கத்தினர், தலித் அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். நிவாரண நிதி கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கத்தைச் சேர்ந்த நாகராஜு, தலித் சங்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் திடீரென வட்டாட்சியரிடம் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் இன்னும் நிவாரண நிதி வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக நிவாரண நிதி வழங்குமாறும் கூறினர்.
அதைக்கேட்ட வட்டாட்சியர் ரத்னாம்பிகா, சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்து வருவாய் அதிகாரி, கிராம கணக்காளர் மூலமாக எனக்கு மனு வர வேண்டும், அப்படி வந்தால்தான் என்னால் அதை பரிசீலித்து நிவாரண நிதி வழங்க முடியும் என்று கூறினார்.
அப்போது அவர்கள் அதிகாரிகள் சரியாக பணியில் ஈடுபடமாட்டார்கள். லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவார்கள். லஞ்சம் கொடுத்தவர்களின் பெயர்களை சேர்த்து அந்த பட்டியலை அரசிடம் சமர்ப்பித்து நிவாரண நிதி வாங்கி கொடுத்துவிடுவார்கள் என்று கூறினர்.
அவர்களது இந்த குற்றச்சாட்டால் ஆவேசமடைந்த வட்டாட்சியர் ரத்னாம்பிகா, அவர்களை நோக்கி கடுமையாக கடிந்து கொண்டார். கோபமாகவும், ஆவேசமாகவும் பேசினார். ஆவணங்களை தூக்கி எறிந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் ஆவேசமாக பேசிக் கொண்டே இருந்தார். இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த சிலர் வட்டாட்சியரின் நடவடிக்கைகளை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அறிந்த உயர் அதிகாரிகள் வட்டாட்சியர் ரத்னாம்பிகா மீது நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.