”பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” - இஸ்லாம் மாணவர்களிடம் கடிந்துகொண்ட கர்நாடக ஆசிரியை பணியிட மாற்றம்!

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவர்களைப் பார்த்து, பாகிஸ்தானுக்கு செல்லும்படி கூறிய ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
school model
school modelfreepik

கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவின் திப்பு நகரில் உருது கல்வி நிறுவனம் நடத்தும் அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி, அப்பள்ளியின் ஆசிரியையான மஞ்சுளா தேவி, 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். அப்போது இரண்டு இஸ்லாமிய மாணவர்கள் அவர் நடத்திய பாடத்தைக் கவனிக்காமல் குறும்புத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் எரிச்சலுற்ற ஆசிரியை மஞ்சுளா தேவி, ”இந்தியா உங்களின் நாடு அல்ல. இது, இந்துக்களின் நாடு. நீங்கள் எல்லாம் இந்தியாவின் அடிமைகள். நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” எனக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

school model
school modelfreepik

இதை, அந்த மாணவர்கள் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் உள்ளூர் தலைவர்களிடம் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து ஷிவமொக்கா நகரைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் நிர்வாகி நஸ்ருல்லாஹ் அளித்த புகாரின்பேரில், ஆசிரியை மஞ்சுளா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியை அந்தப் பள்ளியில் எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், உயரதிகாரிகளின் உத்தரவின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தொகுதி கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக நாடு முழுவதும் பள்ளிகளில் மதரீதியாகவும், சாதிரீதியாகவும் பிரச்னைகள் எழுந்து வருகின்றன. இதற்கு சமீபத்திய சில உதாரணங்கள் அடக்கம். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் டெல்லி காந்தி நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவர்களிடம், ”நாடு பிரிக்கப்பட்டபோது உங்கள் குடும்பங்கள் ஏன் பாகிஸ்தானுக்குப் போகவில்லை. நீங்கள், ஏன் இந்தியாவில் தங்கியிருந்தீர்கள்? இந்தியாவின் சுதந்திரத்தில் உங்கள் பங்களிப்பு இல்லை"எனச் சொன்னதுடன் மதரீதியாகவும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக 4 மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மாணவரை, பிற மாணவர்கள் அறைந்த சம்பவமும், காஷ்மீரில் பள்ளியொன்றில் ’ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்தை எழுதிய இந்து மாணவர், இஸ்லாம் மத ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com