கர்நாடகாவில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள பணிக்குழு : எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகாவில் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கான பணிக்குழுவை அமைத்துவருவதாக தகவல் தெரிவித்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.
மாநிலத்தின் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள, ஒரு பணிக்குழுவை அமைத்து வருவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார். வல்லுநர்கள் கணித்துள்ள கோவிட்-19 தொற்றுநோயின் மூன்றாவது அலைக்கான முன்தயாரிப்புகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் ஒரு திட்டத்தை முன்வைக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, நாராயணா ஹெல்த் தலைவர் டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி தலைமையில், இந்த பணிக்குழுவை அமைத்து வருவதாக கூறினார். 2021 மே 5 ஆம் தேதி வரை மாநிலத்தில், ஆக்ஸிஜன் வசதியுடன் 45,754 படுக்கைகள், 5,305 ஐசியு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களுடன் கூடிய 4,019 படுக்கைகள் இருப்பதாகவும் மாநில அரசு தெரிவித்தது. ஆனால் மத்திய அரசின் திட்டமிடப்பட்ட தேவை 66,333 ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகள், 13,969 ஐசியு படுக்கைகள் மற்றும் 8,382 வென்டிலேட்டர் படுக்கைகள் ஆகும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பெங்களூருவில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்கள் அதிகரிப்பது தொடர்பாக கவலை தெரிவித்த நீதிமன்றம், மாநில அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது.