கர்நாடக தேர்தல் முடிவும், தேசியத் தலைவர்கள் கருத்தும் ஓர் பார்வை
கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடக தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சியின் பிரித்தாளும் அரசியலை மக்கள் புறந்தள்ளியிருப்பதை காட்டுவதாக, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பா.ஜ.க.வின் சிறப்பான செயல்திறனுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தற்போதைய களநிலவரத்தில், கர்நாடகாவில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றி நம்ப முடியாதவையாக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்திருந்தால், முடிவுகள் மிகவும் வித்தியாசமானதாக இருந்திருக்கும் என்று, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் வெற்றி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று, சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். வாக்குச்சீட்டு நடைமுறையை கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.