காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மீறப்படாது: கர்நாடக அமைச்சர் தகவல்
மேகதாது அணைத் திட்டத்தால் காவிரி தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு எந்த வகையிலும் மீறப்படாது என்று மத்திய நீர் மேலாண்மை வாரியத்திடம் விளக்கம் அளிக்கப் போவதாக, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீரின் அளவில் மாற்றம் ஏற்படுமா? பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அணையின் நீர் பயன்படுத்தப்படுமா? போன்றவற்றுக்கு கர்நாடகாவிடம் மத்திய நீர் மேலாண்மை வாரியம் விளக்கம் கோரியுள்ளது. அவ்வாறு எனில், அது காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறுவது ஆகாதா? என கர்நாடக அரசிடம் மத்திய நீர்மேலாண்மை வாரியம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி, விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மேகதாது அணை திட்டத்தால் காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு எந்த வகையிலும் மீறப்படாது என்பதை விளக்கமாக அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.