“கர்நாடகாவில் அரசு செயல்படவேயில்லை”.. லீக் ஆன அமைச்சரின் ஆடியோ.. கலக்கத்தில் முதல்வர்!

“கர்நாடகாவில் அரசு செயல்படவேயில்லை”.. லீக் ஆன அமைச்சரின் ஆடியோ.. கலக்கத்தில் முதல்வர்!
“கர்நாடகாவில் அரசு செயல்படவேயில்லை”.. லீக் ஆன அமைச்சரின் ஆடியோ.. கலக்கத்தில் முதல்வர்!

"கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கைகளை மட்டுமே பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது'' என்று அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. சமீப காலங்களில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அதிகரித்துள்ளது. அங்கு தொடர்ந்து நிகழம் வகுப்புவாத வன்முறை என பல சம்பவங்கள் பாஜக அரசுக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், "கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கைகளை மட்டுமே பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது'' என்று அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமைச்சர் ஜேசி மதுசுவாமியும் சமூக ஆர்வலர் பாஸ்கர் என்பவரும் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று கசிந்துள்ளது. அவர்கள் உரையாடலில் கர்நாடகாவில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில்  அமைச்சர் மதுசுவாமி, “கர்நாடக அரசு செயல்படவில்லை. அடுத்த 8 மாதங்களுக்கு ஆட்சியைக் கடத்தினால் போதும், தேர்தல் வந்துவிடும் என்ற மனநிலையே நிலவுகிறது. கட்சி முழுக்க முழுக்க 2023 வரை ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது” என்று கூறுகிறார்.

மேலும் அந்த ஆடியோவில்  மதுசுவாமியிடம் பேசும் சமூக ஆர்வலர் பாஸ்கர், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் விவசாயிகள் கடனைப் புதுப்பிக்க லஞ்சம் கேட்கின்றனர் என்று புலம்புகிறார். அதற்கு மதுசுவாமி, “வட்டிக்கான பணமெல்லாம் யாரோ கையாடல் செய்கின்றனர். பின்னர் கூட்டுறவு வங்கிகள் கூடுதல் பணம் கேட்கின்றன. இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே அமைச்சர் சோமசேகர் அமைதியாக இருக்கிறார்" என்று கூறுகிறார்.

இருப்பினும் கூட்டுறவுத் துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், அமைச்சர் ஜேசி மதுசுவாமியின் இந்த கருத்தை ஏற்கவில்லை. அவர் கூறுகையில், "நாங்கள் அரசாங்கத்தை நிர்வகிக்கிறோம் என்று அவர் நினைத்தால், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் பதவியில் இருந்து அவர் உடனடியாக விலக வேண்டும். அவர் அரசாங்கத்தின் ஒரு அங்கம். அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, அவர் இவ்வாறு கூறியிருப்பது பொறுப்பற்ற செயல்" என்று விமர்சித்துள்ளார்.

இந்த ஆடியோ அடங்கிய க்ளிப்பை கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அமைச்சர் மதுசுவாமியின் பேச்சு முதல்வர் பொம்மை பசவராஜ் ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: குஜராத் கூட்டு பலாத்கார வழக்கில் விடுதலையான குற்றவாளிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com