விவாகரத்து வழக்கு: நீதிமன்ற வளாகத்திலே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்!

விவாகரத்து வழக்கு: நீதிமன்ற வளாகத்திலே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்!
விவாகரத்து வழக்கு: நீதிமன்ற வளாகத்திலே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கில் ஆஜராகிய மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிபுரா குடும்பநல நீதிமன்றத்தில் சிவக்குமார் - சைத்ரா தம்பதியின் விவகாரத்து வழக்கு நடைபெற்று வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி, கருத்து வேறுபாடுகள் காரணமாக விவகாரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

விவகாரத்து வழக்கின் விசாரணையின் ஒருபகுதியாக சிவக்குமார், சைத்ரா இருவரும் ஆலோசனைக் கூட்டத்தில் (counselling session) பங்கேற்றனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற அக்கூட்டத்தில் பல்வேறு தரப்பட்ட நிபுணர்களின் பரிந்துரையை ஏற்று, தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் இணைந்து வாழ இருவரும் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளியே வந்து, கழிவறை நோக்கி சென்று கொண்டிருந்த சைத்ராவின் கழுத்தை அறுத்தார் சிவக்குமார். கடுமையாக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சைத்ராவுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தொண்டையில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி சைத்ரா உயிரிழந்தார்.

மனைவியின் கழுத்தை அறுத்தபின் நீதிமன்ற வளாகத்தை விட்டு சிவக்குமார் தப்பிக்க முயன்றார். ஆனால் அருகில் இருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சிவக்குமாரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது சிவக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் சிவக்குமார் எப்படி ஆயுதத்தை பதுக்கி வைத்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“இந்தச் சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. சிவக்குமாரை போலீஸ் காவலில் வைத்துள்ளோம். அவர் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்துள்ளோம். கவுன்சிலிங்கிற்குப் பிறகு என்ன நடந்தது? நீதிமன்றத்துக்குள் ஆயுதம் எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்துவோம். இது திட்டமிட்ட கொலையா? என்பது அடுத்தகட்ட விசாரணையின் போது தெரிய வரும்” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஹரிராம் சங்கர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com