‘சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள்’: கர்நாடகா சிறை கையேடு சொல்வது என்ன?

‘சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள்’: கர்நாடகா சிறை கையேடு சொல்வது என்ன?
‘சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள்’: கர்நாடகா சிறை கையேடு சொல்வது என்ன?

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக டிஐஜி ரூபா பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் கர்நாடகா சிறைக் கையேட்டில் இடம்பெற்றுள்ள முக்கியமான சில விதிகளைப் பார்க்கலாம்.

கர்நாடக சிறை கையேடு விதி 465-யின் படி மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டு முதல் வகுப்பு கைதிகள் தங்கள் சொந்த செலவிலோ அல்லது உறவினர்களிடமிருந்தோ பழம், பிஸ்கெட், ஹார்லிக்ஸ் போன்ற உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். கொடுக்கப்படும் பொருள்கள் சாதாரணமானவையாக இருக்கவேண்டும் என்றும், சொகுசுப் பொருள்களை பெற்றுக்கொள்ள இந்த சலுகையை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் வெளியில் சமைத்த உணவை சிறைக்குள் அனுமதிக்க முடியாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விதி 465 உட்பிரிவு இரண்டின்படி சிறை கண்காணிப்பாளரின் அனுமதியுடன் முதல் வகுப்பு கைதிகள் தங்களுடைய உணவை தாங்களே சமைத்துக்கொள்ளலாம் என்றும், சிறை கண்காணிப்பாளரின் தனிப்பட்ட விருப்பத்தின்படி அவர்களுக்கு சமைப்பதற்கும், பாத்திரங்களை சுத்தப்படுத்துவதற்கும் நல்லொழுக்கமுடைய ஒரு கைதியின் உதவியை அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறைக் கண்காணிப்பாளர் விரும்பினால் முதல் வகுப்பு கைதிகள் தனி சமையல் பாத்திரங்கள், உணவு உட்கொள்ளும் பாத்திரங்கள் தனியாக வைத்துக்கொள்ள அனுமதிக்கலாம் என்று கர்நாடக சிறை கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சிறை கையேடு விதி 466-ன் படி முதல் வகுப்பு கைதிகள் தங்களுடைய சொந்த உடைகளை அணிந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் அடையாளங்கள் உள்ள உடைகள் அனுமதிக்கப்படாது. கண்காணிப்பாளரின் அனுமதியுடன் அவ்வப்போது கைதியின் சொந்தச் செலவில் உடைகள் வாங்கிக்கொள்ளலாம். விதி 467-யின் படி முதல் வகுப்பு சிறைக் கைதிகள் அவர்களுடைய சொந்தப் படுக்கையை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். விதி 468-யின் படி முதல் வகுப்பு கைதிகள் சிறை நூலகத்தில் புத்தகங்கள், செய்தித் தாள்கள் மற்றும் பருவ இதழ்களை படிக்கலாம், கண்காணிப்பாளரின் அனுமதியுடன் கைதிகளின் சொந்த செலவில் பொருத்தமான புத்தகங்களை வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். விதி 471-யின் படி முதல் வகுப்பு கைதிகளுக்கு தனியாக ஒரு மேஜை நாற்காலியும் வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com