கர்நாடகா| பாலியல் குற்ற சம்பவங்கள்.. சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்த உள்துறை அமைச்சர்
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 4ஆம் தேதி அதிகாலை சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், “பெங்களூரு பெரிய நகரம். பாலியல் தொல்லை சம்பவங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வருகின்றன. போலீசார் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. என்ன செய்வது? பாலியல் தொல்லை சம்பவங்கள், இயல்பாகவே மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன. இந்த இடத்தில்தான் பாலியல் தொல்லை நடக்கிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
அவருடைய இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில், தாம் பேசியது தொடர்பாக பரமேஸ்வர் மன்னிப்பு தெரிவித்துள்ளார். தாம் கூறிய கருத்துகள் திரித்துக் கூறப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நான் கூறிய அறிக்கை சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பெண்களின் பாதுகாப்பில் நான் எப்போதும் மிகுந்த அக்கறை கொண்டவன். நிர்பயா நிதி பெண்களின் பாதுகாப்பிற்காக சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதை நான் உறுதி செய்துள்ளேன். எனது அறிக்கை திரிபுபடுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. இதனால் எந்தப் பெண்ணும் காயமடைந்திருந்தால், நான் எனது வருத்தத்தையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.