’பாஜக கூட்டணியின் கூட்டத்துக்கோ, எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கோ அழைப்புஇல்லை''-வருத்தத்தில் குமாரசாமி

’பாஜக கூட்டணியின் கூட்டத்துக்கோ அல்லது எதிர்க்கட்சிகள் கூட்டணிக் கூட்டத்துக்கோ தாங்கள் அழைக்கப்படவில்லை’ என மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பாஜக 66 இடங்களை பிடித்திருக்கிறது. ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்த முறை தனியாகக் களமிறங்கி வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் அக்கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் தொடர்பில்லாமல் நட்டாற்றில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், ’பாஜக கூட்டணியின் கூட்டத்துக்கோ அல்லது எதிர்க்கட்சிகள் கூட்டணிக் கூட்டத்துக்கோ தாங்கள் அழைக்கப்படவில்லை’ என மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

குமாரசாமி
குமாரசாமிபுதிய தலைமுறை

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் இரட்டை கொள்கையைக் கடைப்பிடிப்பதாக விமர்சித்தார். அப்போது, ‘பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறதே’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த குமாரசாமி, ”எங்களை பாஜகவின் ’பி’ டீம் எனப் பலர் அழைக்கின்றனர். ஆனால் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் இப்போது காங்கிரஸுடன் சேர்ந்துகொண்டு ஆட்சியில் தொடர்கிறார்” எனப் பதிலளித்துள்ளார்.

இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து விளக்கம் அளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ”மாநில கட்சி என்பதால் அவர்களைத் தனியாக அழைக்கத் தேவையில்லை என்றும், அவர்களாக முன்வந்து எதிர்க்கட்சிகள் அணியில் இணைந்திருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com