கர்நாடகா: உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

கர்நாடகா: உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் உயிரிழப்பு
கர்நாடகா: உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் உயிரிழப்பு

கர்நாடக மாநில உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் நேற்றிரவு திடீரென உயிரிழந்தார்.

கர்நாடகவில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. இதில், வனம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக உமேஷ் கட்டி (61) பதவி வகித்து வந்தார். பாஜக-வின் மூத்த தலைவரான இவர், பெலகாவி மாவட்டம் உக்கேரி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் வசித்து வந்த இவர், நேற்று வழக்கமான பணியை முடித்துவிட்டு வீடு உமேஷ் கட்டிக்கு இரவு 10 மணி அளவில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அவரது குடும்பத்தினர் பெங்களூரு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் 9 முறை தேர்தலில் போட்டியிட்டு 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். ஒரு முறை 800 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். 6 முறை இவர் கட்சி மாறியுள்ளார்.

வடகர்நாடகத்தை தனிமாநிலமாக அறிவிக்கக் கோரி அவ்வப்போது போர்க்கொடி தூக்கி வந்த இவர், கர்நாடக முதல்வராகும் தகுதி தனக்கு இருப்பதாகவும் கூறி சர்ச்சையை எழுப்பி வந்தார். இவரது மறைவுக்கு முதல்வர் பசவராஜ்பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்றிரவு எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்குச் சென்று உமேஷ் கட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன் அமைச்சர் உமேஷ் கட்டியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதுபோல் அமைச்சர்கள் ஆர்.அசோக், அஸ்வத் நாராயண் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மருத்துவமனைக்குச் சென்று உமேஷ் கட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது, மறைந்த உமேஷ் கட்டியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com