ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தொடரும் கர்நாடக எருதுகள்....

ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தொடரும் கர்நாடக எருதுகள்....
ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தொடரும் கர்நாடக எருதுகள்....

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், கர்நாடகமும் தங்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பல போட்டியை நடத்த சட்டம் கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருகிறது.

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் நீர் நிறைந்த ஆடுகளங்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் எருதுப் போட்டி கம்பல எனும் பெயரில் புகழ் பெற்றது. கர்நாடக மக்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பல போட்டியின் போது எருதுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, அந்த போட்டிகளுக்குத் தடை கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு முறையிட்டது. இதையடுத்து கம்பல போட்டிகளை நடத்த 2016ம் ஆண்டு நவம்பரில் கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் வெடித்தது போல கம்பல போட்டிகளுக்காக கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன. அதன் ஒருபகுதியாக மங்களூரில் தடையை மீறி வரும் 28ல் கம்பல போட்டிகள் நடத்தப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மங்களூரை அடுத்த மூதாபித்ரி கிராமத்தின் ஸ்வராஜ் மைதானத்தில் கம்பல தடையை நீக்கக் கோரி 500 எருதுகளுடன் சுமார் 5,000 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தத் தடையை நீக்க வலியுறுத்தி மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்திடம் கர்நாடக எம்பி ஒருவர் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ரவிசங்கர் பிரசாத், கம்பல விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாநிலங்களின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அது தமிழகமாக இருந்தாலும், கர்நாடகாவாக இருந்தாலும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கம்பல கோரிக்கைக்கு ஆதரவாகவே மாநில அரசு இருப்பதாகத் தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இது குறித்து கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா கூறுகையில், பிப்ரவரி 6ம் தேதி கூடும் சட்டப் பேரவையில், கம்பல போட்டிகளுக்கு சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com