காவிரி நீர் கோரிக்கையுடன், எடியூரப்பாவுக்கு ஸ்டாலின் வாழ்த்துகள்!
கர்நாடக தேர்தலில் ஆட்சியமைக்கும் எடியூரப்பாவிற்கு வாழ்த்துகள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகள் இதில் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. பின்னர் தொடர்ந்து பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எண்ணிக்கையில், பாஜக முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையா சாமுண்டேஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், ‘கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எடியூரப்பாவிற்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

