``ராவணன், சகுனி வார்த்தைகள் பிரச்சனையாவதில்லை... கசாப் மட்டும் ஏன்?”- அமைச்சர் பேச்சு

``ராவணன், சகுனி வார்த்தைகள் பிரச்சனையாவதில்லை... கசாப் மட்டும் ஏன்?”- அமைச்சர் பேச்சு
``ராவணன், சகுனி வார்த்தைகள் பிரச்சனையாவதில்லை... கசாப் மட்டும் ஏன்?”- அமைச்சர் பேச்சு

கர்நாடகாவில் உள்ள கல்லூரி பேராசிரியர் ஒருவர், முஸ்லிம் மாணவர் ஒருவரின் பெயரை பயங்கரவாதியின் பெயரோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அந்த வீடியோ காணொளியாக வைரலான நிலையில், அந்த பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிபால் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பேராசிரியர் ஒருவர் 26/11 மும்பைத் தாக்குதல் குறித்து பேசிய பொழுது, அங்கிருந்த ஒரு இஸ்லாமிய வகுப்பு மாணவர் ஒருவரிடம் 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டுள்ளார். மாணவர் தனது பெயரை கூறியவுடன், `ஓ! நீ என்ன கசாப் மாதிரியா (மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவர்)' என்று பேராசிரியர் கேட்டுள்ளார்.

உடனே அந்த மாணவர், “மும்பை தாக்குதல் சம்பவம் என்ன நகைசுவையா? இஸ்லாமியனாக இருந்துகொண்டு ஒவ்வொரு நாளும் இதனை அனுபவிப்பது நகைச்சுவை கிடையாது’’ என ஆவேசமாக பேசியவுடன்... “நீ என் மகன் போன்றவன்... அமைதியாக இரு!” என்று கூறி மன்னிப்பு கேட்டார் பேராசிரியர்.

அதற்கு பதிலளித்த மாணவர், “உங்கள் மகனை இப்படி தான் ஒரு பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசுவீர்களா? நீங்கள் பேராசிரியர், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் இடத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் மன்னிப்புக் கேட்கிறீர்கள் என்பதால் அது உங்கள் எண்ணத்தை மாற்றாது” என கோபமாக பதிலளித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதைப்பற்றி கர்நாடகா கல்விதுறை அமைச்சர் பிசி நாகேஷ் தெரிவித்துள்ள கருத்து கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “நாம், நமது தினசரி வாழ்க்கையில் ராவணன், சகுனி போன்ற வார்த்தைகள் பயன்படுத்துகிறோம். சட்டபேரவையில் கூட இந்த வார்த்தைகளை பலமுறை பேசியிருக்கிறோம்.. அப்போது எல்லாம் அது பிரச்சனையாவதில்லை. ஆனால் கசாப்பை பற்றி பேசினால் மட்டும் உடனே அது பிரச்சனையாகிவிடுகிறது. ஏன்? பேராசிரியர் இந்த கருத்தை சொல்லியிருக்க கூடாதுதான். ஆனால் இந்த பிரச்சனை இப்போது வாக்கு வங்கிக்காக அரசியலாக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com