கமல் விவகாரம் | ”அரசியலாக்க வேண்டாம்; நாம் அண்டை மாநிலத்தவர்கள்” - டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்!
ம.ஜெகன்நாத்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி ’தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் எனத் தெரிவித்திருந்தார். கமலின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கர்நாடகத்தில் ’தக் லைஃப்’ திரைப்படம் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, ”கர்நாடக மொழிக்கு நீண்ட வரலாறு உள்ளது, அதுபற்றி கமலுக்கு தெரியவில்லை, பாவம் வரலாறு தெரியாமல் பேசுகிறார்” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா காட்டமாக பேசியிருந்தார். இருப்பினும், ”இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கப் போவதில்லை” என்று கமல் கூறியதால் கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், கமல் விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ”இந்த பிரச்னையை அரசியலாக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர், “நாம் அண்டை மாநிலத்தவர்கள். நாம் ஒன்றாக வேலை செய்கிறோம், வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நமது தண்ணீர் தமிழகத்துக்குச் செல்கிறது, தமிழக மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள். நாம் எதிரிகள் கிடையாது, அனைவரும் நண்பர்கள். இந்த விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
கமலின் கருத்துக்கு துணை முதல்வரும் அம்மாநிலத்தை ஆளும் கட்சியின் தலைவருமான சிவக்குமார் எதிர்ப்பு தெரிவிக்காமல் பேசியிருக்கும் நிலையில், கர்நாடகத்தில் ’தக் லைஃப்’ திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.