பிரிந்து வாழ்ந்த தம்பதி | குழந்தைக்குப் பெயர் சூட்டிய நீதிமன்றம்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
கடந்த டிசம்பர் 14ஆம் தேதி, கர்நாடக மாநிலம் ஹன்சூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விநோத வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. 2021ஆம் ஆண்டு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தக் குழந்தை பிறந்தது முதலே தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அதாவது, அந்த ஆண் குழந்தையின் தாய், குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தையை ‘ஆதி’ என அழைத்து வந்துள்ளார். ஆனால், அதனை தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. தந்தையோ, அக்குழந்தைக்கு ‘ஷனி’ என பெயர் சூட்ட விரும்பியிருக்கிறார். அது தாய்க்குப் பிடிக்கவில்லை. இதனால் குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். குழந்தைக்கும் பெயர் வைக்கவில்லை.
இந்த நிலையில், குழந்தையின் தாய் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் தரப்பில் பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அனைத்துப் பெயர்களையும் பெற்றோர் நிராகரித்த நிலையில், ‘ஆர்யவர்தனா’ என்ற பெயரைச் சூட்ட இருவரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிமன்றமே குழந்தைக்குப் பெயர் சூட்டியது. இறுதியில், பிறந்த ஆண் குழந்தைக்கு ‘ஆர்யவர்தனா’ என்று நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு பெயர் சூட்டியது. இந்தப் பெயரை பெற்றோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இறுதியில், மேலும் ட்விஸ்ட்டாக குழந்தை பிறந்தது முதலே பிரிந்து வாழ்ந்துவந்த அந்தத் தம்பதி, நீதிமன்றத்தில் மீண்டும் மாலை மாற்றி, பிள்ளைக்காக ஒற்றுமையாக வாழ்வதற்கும் நீதிபதிகள் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளனர். நீதிமன்றம் ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டியது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுவதோடு, பிரிந்திருந்த தம்பதிகளையும் சேர்த்தவைத்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.