காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மோதல் ? - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு ஆட்சியை கலைப்பதற்கு எம்.எல்.ஏக்கள் பேரம் நடைபெறுவதாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றன. கர்நாடக முதலமைச்சராக உள்ள குமாரசாமி கூட பாஜக மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அண்மையில் கர்நாடக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஒன்றில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆனந்த் சிங் என்ற எம்.எல்.ஏவை ஜே.என்.கணேஷ் என்ற எம்.எல்.ஏ பாட்டிலைக் கொண்டு தலையில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் காயமடைந்த ஆனந்த் சிங் தற்போது பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் ரகுநாத் நலம் விசாரித்துள்ளார். அதேசமயம் காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மோதிக்கொண்டார்கள் என்ற தகவலை மறுத்துள்ளார். ஆனால் சிவகுமாரின் சகோதரரான சுரேஷும் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளார். இந்த தகவலை குறிப்பிட்டு பதிவிட்டு கர்நாடக பாஜக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருத்து வேறுபாடுகளுடன் உள்ளனர் என்பதற்கு இதுவே சான்று என விமர்சித்துள்ளது. அத்துடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் மோதிக்கொண்டதனாலேயே ஒருவர் காயமடைந்திருப்பதாகவௌம் குறிப்பிட்டுள்ளது.